ஞாயிறு, 18 ஜனவரி, 2009

ஒரு நாள் முதல்வர்

முதல்வன் என்றொரு தமிழ்ப் படத்தை பார்த்தவர்கள், அதனுடைய சினிமாத்தனங்களை ஒரு பக்கம் ஓரம் கட்டி வைத்து விட்டு அதில் உள்ள மையக் கருத்தை எடுத்துக்கொண்டால், நாம் வாழுகின்ற இந்த சமூகம் எப்பொழுதேனும் சுத்தமாக வாய்ப்பு உள்ளதா என்று ஏங்கும் பல மனிதர்களின் உள்ள கிடக்கையை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.

டைரக்டர் ஷங்கர் அதனை தன்னுடைய பாணியில் நிறைய கற்பனையை சேர்த்து (ஹீரோ அர்ஜுன் குப்பத்து ரௌடிகளை பஸ்சின் மீது நின்று துவைத்து எடுப்பது, உப்பு கருவாடு பாடலை பாடுவது போன்ற சில உதாரணங்கள்) காண்பித்தாலும், சுஜாதாவின் எளிமையான சிந்தனைகள் சில ஒரு நாட்டை ஆளும் தலைவன் எந்த அளவிற்கு தன்னுடைய மக்களை குறைகளின்றி சுபிட்சமாக வைத்து இருக்க வேண்டும் என்பதற்கு புகார் பெட்டி ஒவ்வொரு வீதியிலும் வைத்து அது என்றைக்கு புகார்களே இல்லாமல் இருக்குமோ அன்று தான் நல்லாட்சி நடப்பதாக சொல்வது, ஒவ்வொரு விவேகமுள்ள முதிய அமைச்சருடன் ஒரு வேகமுள்ள இளமையானவர் சேர்ந்து பணியாற்றுவது என்று சில புரட்சிகரமான (ஒரு திரைப்படத்தின் மூன்று மணி நேர மசாலா சம்ப்ரதாயங்களையும் உள்ளடக்கி ) கருத்துக்களை சொல்லி இருப்பது ஒரு புதுமையான முயற்சி தான்.

இதையெல்லாம் எதற்கு நான் சொல்கிறேன் என்றால் தமிழ் நாட்டில் தி.மு.க , ஆ.தி.மு.க என்று பார்த்து சலித்தவர்கள் என்று தான் இத்தமிழகத்திற்கு விடிவு வருமோ என்று ஏங்குகிறார்கள். இந்த பக்கங்களில் மேலும் மேலும் ஆளும் வர்க்கத்தையும், தலைவர்களையும் பற்றி பேசி காலத்தை வீணடிக்காமல், உருப்படியாக என்னால் என்ன செய்ய முடியும் என்று நான் யோசிக்கிறேன்.

அப்படி யோசித்ததன் விளைவு தான், பள்ளி கூடம் படிக்கும் காலத்தில் பேச்சு போட்டியில் "நான் முதல்வரானால்" என்று பேசியது ஞாபகம் வருகிறது. இன்றைய தகவல் உலகத்தில் தமிழ் நாடு அரசு பற்றிய தகவல்கள் அரசு வலை தளங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு அமைச்சகமும் அது செயல் படுகின்ற விதம், அதற்க்கு கிடைக்கும் வருடாந்திர ஒதுக்கீடு, அதை எவ்விதத்தில் செலவு செய்திருக்கிறார்கள் என்று, பல பல தகவல்கள் இருக்கின்றன.

இதெல்லாம் நமக்கு எப்படி உதவும் என்று தானே உங்கள் மனம் எண்ணுகிறது ? தொடர்ந்து இந்த பாகங்களை படியுங்கள். நான் போகும் பாதையில் எனக்கு தென்படும் முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் எழுதுகிறேன். இதற்கும் ஒரு நாள் முதல்வர்க்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் மன்னனே. இன்டர்நெட் கொடுப்பது தகவல். ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் கசிவது அதைப்பற்றிய தகவல்களே. ஆளுவதற்கு தகவல்களும் அதைச் சார்ந்த கேள்விகளும் மிகவும் முக்கியம். எனவே வாருங்கள் இந்த நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது என்று ஆளுமை கண்ணோட்டத்தில் இருந்து பார்போம்.

கருத்துகள் இல்லை: